திருநள்ளாறு கோயிலில் இன்று தெப்பல் உத்ஸவம்
By DIN | Published On : 14th June 2019 07:43 AM | Last Updated : 14th June 2019 07:43 AM | அ+அ அ- |

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவ தெப்ப உத்ஸவம் பிரம்ம தீர்த்தக் குளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) இரவு நடைபெறுகிறது.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்குக் கிழக்குப் புறமாக உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இக்குளத்தில்தான் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய உத்ஸவங்களில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்ப வைபவமும் இத்தீர்த்தக் குளத்திலேயே நடைபெறும். இக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் கரைகள் பலமிழந்திருந்ததால், திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பில் இக்குளத்தில் கரை கட்டுதல், தீர்த்த மண்டபம் கட்டுதல் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று, அண்மையில் நிறைவடைந்தன. குளத்தில் புதிதாக தண்ணீர் நிரப்பும் பணியும்
நிறைவடைந்தது.
கோயில் பிரமோத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. தீர்த்த மண்டபம் இல்லாமல் குளம் இருந்துவந்த நிலையில் தெப்பம், தீர்த்தவாரிகள் இதுவரை நடைபெற்றுவந்தன. இந்நிலையில், குளம் சீரமைக்கப்பட்டு தீர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதால் நிகழாண்டு முதல் தீர்த்தவாரி மற்றும் தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், தீர்த்தவாரி சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது.
இக்கோயிலில் குடமுழுக்குக்குப் பிறகு நடைபெறும் பிரமோத்ஸவம் என்பதால் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்புற அமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.