திருநள்ளாறு கோயிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு
By DIN | Published On : 06th March 2019 05:23 AM | Last Updated : 06th March 2019 05:23 AM | அ+அ அ- |

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்று விளங்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜையும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் 2-ஆம் கால பூஜையும், 3 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.
ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்குப் பல்வேறு வகையான பழங்கள், திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நான்காம் கால பூஜை முடிந்த பிறகு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. கோயிலில் அம்பாள் சன்னிதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனையும் தொடர்ந்து, கோபுர தீபாராதனையும் நடத்தப்பட்டு, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நான்கு மாட வீதிகளுக்கும் புறப்பாடான சுவாமி, பகல் 11 மணியளவில் கோயிலை சென்றடைந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, தருமபுர ஆதீனக் கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சோமநாதர், ஸ்ரீ பார்வதீசுவரர், ஸ்ரீ அண்ணாமலையேசுவரர், தருமபுரம் ஸ்ரீ யாழ்முரிநாதர், திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகர், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர், ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர், தலத்தெரு ஸ்ரீ சிவலோகநாதசுவாமி உள்ளிட்ட பல்வேறு பகுதி சிவன் கோயில்களிலும் 4 கால பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டது. மகா சிவராத்திரியையொட்டி, திருநள்ளாறு கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும்,பிற கோயில்களில் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றன.