செவிலியர் பயிற்சி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 22nd March 2019 09:31 AM | Last Updated : 22nd March 2019 09:31 AM | அ+அ அ- |

காரைக்காலில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை செவிலிய பயிற்சி மாணவ, மாணவியர் புதன்கிழமை வழங்கினர்.
தேர்தல் துறை சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக நகரம், கிராமங்கள், தொழிற்சாலைகள், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடுமிடங்கள், கல்லூரிகள், சாலையில் செல்வோர் என பல நிலைகளில் தேர்தல் விழிப்புணர்வு செய்யப்படுகின்றன. காரைக்கால் ஆட்சியரகத்தில் செயல்படும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி குறித்தும், இதில் தெரிவிக்கக் கூடிய தகவல்கள் குறித்தும், சி-விஜில் என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து, அனுப்பக்கூடிய படம், விடியோ உள்ளிட்ட புகார்கள் குறித்தும் துண்டுப் பிரசுரத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவிபாட் இயந்திரம் குறித்தும் பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் மாணவ, மாணவிகள், தேர்தல் துறையின் இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை தன்னார்வலர்களாக முன்வந்து சாலையில் செல்வோரிடம் புதன்கிழமை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் துறையின் விழிப்புணர்வு அமைப்பான
ஸ்வீப் நோடல் அதிகாரி லட்சுமணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...