தமிழகத்துக்கு கடத்த முயன்ற சாராயப் புட்டிகள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 09:32 AM | Last Updated : 22nd March 2019 09:32 AM | அ+அ அ- |

திருப்பட்டினத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற சாராயப் புட்டிகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலில் மதுப்புட்டிகள், பணம் உள்ளிட்ட அன்பளிப்புகளைத் தடுக்க தீவிரமான கண்காணிப்புகளை தேர்தல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காரைக்காலில் மது வகைகள் தமிழகத்தைக் காட்டிலும் விலை குறைவு என்பதால், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் அதிகமாக கடத்தக்கூடும் எனக் கருதி போலீஸார் தீவிரமான கண்காணிப்பு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்ட போலீஸார் வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மேலவாஞ்சூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பட்டினம் பகுதியிலிருந்து தமிழகத்தை நோக்கிச் சென்ற 2 இருசக்கர வாகனங்களை நிறுத்த முயற்சித்தபோது, அதனை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இருசக்கர வாகனங்களை போலீஸார் சோதித்தபோது, அதில் 180 மிலி அளவு கொண்ட 732 சாராயப் புட்டிகள் சாக்கு மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 இருசக்கர வாகனங்களையும், சாராயப் புட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை காவல் ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர், காரைக்கால் கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...