பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டது என்று அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் குற்றம்சாட்டினார்.
அம்பகரத்தூர் பகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மேலும் பேசியது:
இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு, ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரமும், அதனைப் பாதுகாக்க சட்டங்களும் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இதனை பாதுகாத்து வந்துள்ளது. ஆனால், இப்போது அதற்கு குந்தகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் கடந்த 5 ஆண்டு கால போக்கால் இதனை உறுதிப்பட தெரிவிக்க முடிகிறது. இந்தக் கட்சியுடன் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. புதுச்சேரி மாநிலம் அமைதி, வளர்ச்சி, சகோதரத்துவம் கொண்டதாக விளங்கக்கூடியது. காங்கிரஸை பொருத்தவரை அமைதி, வளர்ச்சிதான் கொள்கையாகும். பாஜக, என்.ஆர்.காங்கிரஸை பொருத்தவரை அதிகாரம் கொள்கையாகும். அதிகாரத்தைக் கொள்கையாக கொண்டோருக்கு பொதுநலன் சிந்தனை வராது. எனவே இக்கொள்கை கொண்டோரை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவேலு, திருநள்ளாறு பகுதி ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ், முன்னாள் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.