சி-விஜில் செயலி, இலவச தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அதிகாரி
By DIN | Published On : 28th March 2019 06:28 AM | Last Updated : 28th March 2019 06:28 AM | அ+அ அ- |

சி-விஜில் என்கிற செயலி மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா பேசியது:
கல்லூரியில் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். முதலில் வாக்களிக்கச் செல்வோர் மன உறுதியுடன், நேர்மையான முறையில் வாக்கைச் செலுத்தவேண்டும். மக்களவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் ஒருவர்கூட விடுபடாமல் தமது வாக்கை செலுத்தவேண்டும்.
தேர்தல் என்றால் தமது வாக்குரிமையை செலுத்தவேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுப்பதோடு, எந்தவித நேர்மையற்ற செயலுக்கும் துணை போய்விடாமல் இருப்பது சிறந்ததாகும் என்றார் அவர்.
மேலும், அவர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, சி -விஜில் என்கிற செயலியை தமது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, தேர்தல் தொடர்பான புகார்கள், கருத்துகளை, விடியோ மற்றும் புகைப்படத்துடன் பதிவிடலாம். மாவட்ட ஆட்சியரகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொண்டு புகார்கள், கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
தேர்தல் ஆணையம் வரையறுத்துத் தந்துள்ள ஆவணங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றார்.
மாணவியர் பலர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு மாவட்ட துணை ஆட்சியர்
எம்.ஆதர்ஷ் விளக்கம் அளித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...