பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
By DIN | Published On : 28th March 2019 06:30 AM | Last Updated : 28th March 2019 06:30 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதி விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடியாக உளுந்து, பயறை தொடர்ந்து, பருத்திச் சாகுபடியில் தீவிரம்காட்டி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். குறிப்பாக விழுதியூர் பகுதி பேட்டை, அகலங்கண்ணு, சேத்தூர், இளையான்குடி, புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியான திருவேட்டைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்திச் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதேபோல், காரைக்கால் பகுதியில் தை மாத நெல் அறுவடைக்குப் பின்பு உளுந்து, பயறு, பருத்திச் சாகுபடி தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு நெல் அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில், உளுந்து, பயறு, பருத்திச் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பருத்தி விவசாயிகள் கூறியது: கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தொடர் வறட்சி காரணமாக நெல்லுக்கு மாற்றுப் பயிராக குறைந்த நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஓர் ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். தனியார் நிறுவனத்தில் விதை, உரம் வாங்கிவந்து பயன்படுத்துகிறோம். அரசு சார்பிலும் தற்போது உரம், பயிர் ஊக்கிகள் தரப்படுகின்றன. பருத்தி நான்கரை மாதப் பயிர் என்ற நிலையில், சித்திரை மாத வாக்கில் பூ பூத்து, காய் காய்க்கும் பருவமாகவும், வைகாசி மாதத்தில் பஞ்சு எடுக்கும் பருவமாகவும் இருக்கும். சரியான தருணமாக கூறப்படும் பூ பூத்து, காய் வைக்கும் பருவத்தில் கோடை வெயில் இருக்கும்.
வெயில் தொடர்ந்து இருந்தால் மகசூல் நிறைவாக இருக்கும் . இந்த பருவத்தில் மழை பெய்தால் வேர் அழுகல், வாடல் நோய் ஏற்பட வாய்ப்புண்டு
என்கின்றனர் விவசாயிகள்.
பயிர் நிலவரம் குறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் (பொ) முகம்மது தாசீர் கூறியது: காரைக்காலில் குறைவான நிலப்பரப்பிலேயே பருத்தி பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டின் மழை அளவு குறைவாக இருந்ததை இதற்கு காரணமாக சொல்லமுடியும். எனினும் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனை, ஊக்கத்தை வேளாண் துறை அளித்துவருகிறது.
பருத்திப் பயிருக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையில் மாவட்டத்தில் பாசிக் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை பராமரிப்பு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை, 250 கிலோ காட்டன் பிளஸ் என்ற பயிர் ஊக்கி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 500 கிலோ வரவழைக்கப்பட்டு, தரப்படவுள்ளன. பருத்தியில் எந்த பாதிப்பும் வந்துவிடாத வகையில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, பயிரை அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...