பார்வதீசுவரர் கோயிலில் சூரிய பூஜை தொடக்கம்
By DIN | Published On : 28th March 2019 06:30 AM | Last Updated : 28th March 2019 06:30 AM | அ+அ அ- |

காரைக்கால் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பிகை சமேத பார்வதீசுவர சுவாமி கோயிலில் 7 நாள் நடைபெறும் சூரிய பூஜை புதன்கிழமை தொடங்கியது.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தரால் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமாகும். வேளாண்மை செழிப்புக்காக மழையில்லாத காலத்தில் துயரப்பட்ட விவசாயிகளுக்காக மழை பெய்வித்து, தாமே உழவனாக வந்து தரிசனம் தந்தவர் சிவபெருமான என்ற பெருமை இக்கோயில் மூலவருக்கு உண்டு. இக்காரணத்தால் இக்கோயிலில் உள்ள பகுதி திருத்தெளிச்சேரி எனவும் அழைக்கப்படுகிறது. இதனால், இங்கு விதைத்தெளி உத்ஸவம் ஆண்டுதோறும் நடைபெறும்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், 7 நாள்கள் மாலை வேளையில் சிவலிங்கத்தை சூரியன் வழிபடும் விதமாக சூரிய பூஜை நடைபெறுகிறது. இப்பூஜையின் முதல் நாளான புதன்கிழமை மாலை 5 மணியளவில் சிவலிங்கம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, மேற்கு திசையில் சூரியன் மறையும் வேளையில், மாலை 5.50 மணி முதல் படிப்படியாக சூரிய ஒளி கோயிலுக்குள் பரவி, சிவலிங்கத்தின் மீது சரியாக 6.10 மணிக்கு விழுந்தது. அப்போது, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...