அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
By DIN | Published On : 05th May 2019 01:36 AM | Last Updated : 05th May 2019 01:36 AM | அ+அ அ- |

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் (45) கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் என்பவர் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
குத்தூஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தவர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி காரைக்காலில் உள்ள குத்தூஸ் வீட்டிலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய புலனாய்வு முகமையைக் கண்டித்தும், தங்களது அமைப்பின் மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி, அமைப்பின் மாவட்டத் தலைவர் அஷ்ரப், செயலர் பக்ருதீன் ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை காரைக்கால் பழைய ரயிலடி அருகே கூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், உரிய அனுமதியைப் பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக்கூறி அங்கு வந்த காரைக்கால் நகரக் காவல் ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்ட போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றோரிடம் விளக்கினர்.
எனினும் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த நிலையில் 8 பெண்கள் உள்ளிட்ட 55 பேரை போலீஸார் கைதுசெய்த னர்.