ஆக்கிரமிப்பு அகற்றம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
By DIN | Published On : 05th May 2019 01:37 AM | Last Updated : 05th May 2019 01:37 AM | அ+அ அ- |

காரைக்கால் நகரப் பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளுக்கு பொதுமக்களிடையேயும், மக்கள் பிரதிநிதிகள் மத்தியிலும் வரவேற்பு மிகுந்து காணப்படுகிறது. தொலைநோக்குப் பார்வையில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பணிகள், எந்த நிர்பந்தத்துக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும் என ஒருசாராரும், எந்தவித ஆலோசனை, கால அவகாசம், திட்டம் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக மற்றொரு சாராரும் புகார் கூறுகின்றனர்.
காரைக்கால் பிரெஞ்சுக் காலனிப் பிராந்தியமாக இருந்தபோதிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட நகரமாகவே இருந்து வருகிறது. காரைக்கால் என்றாலே சாலை அழகு ஒன்றே பெயர் பெற்றதாகும்.
சுமார் 30 ஆண்டுகளுக்கிடையே படிப்படியாக மக்கள் தொகை பெருக்கமும், நகரப் பகுதி நோக்கி குடியிருப்புகள் வரத்தும், வணிக நிறுவனத்தார் பெருக்கமும், வெளியூரைச் சேர்ந்தோர் காரைக்காலில் குடியமர்தல், வணிக நிறுவனம் அமைத்தல் போன்ற செயலும் அதிகரித்துவிட்டன.
இருசக்கர, கார்கள் வாகனப் பெருக்கமும் அதிகரித்துவிட்டதும், நகரப் பகுதியில் வியாபார நிறுவனத்தினர் பல லட்சம் ரூபாய் செலவில் கடைகளை உள்ளேயும், வெளியேயும் அழகுபடுத்துதல், இந்த பணியின்போது நகராட்சி, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம் இருப்பதையெல்லாம் பொருள்படுத்தாது ஆக்கிரமித்துக்கொள்ளுதல் போன்ற செயலும் பெருகிவிட்டன.
போக்குவரத்து நெருக்கடி...
காரைக்காலில் பாரதியார் சாலை, மாதா கோயில் சாலை, திருநள்ளாறு சாலை, புளியங்கொட்டை சாலை, காமராஜர் சாலையில் மட்டும் பெரிய, சிறிய கடைகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. காரைக்கால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3.50 லட்சத்தையும் கடந்துகொண்டிருக்கிறது.
என்.ஐ.டி., ஜிப்மர், தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, புதுவை பல்கலைக்கழக மையம் போன்ற உயர்கல்வி மையங்களும், துறைமுகம், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பெரு நிறுவனங்களும் ஏராளம் உள்ளதால், அனைத்துத் தரப்பினரும் காரைக்கால் நகரப் பகுதியில் வணிகம் செய்ய வருகிறார்கள். பகல் 10 முதல் 1 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலும் மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து என்பது கடும் நெருக்கடியிலேயே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.
திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியிலிருந்தும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காரைக்கால் மருத்துவமனைக்கு வேகமாக சென்றடைய முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் இருந்துவருகிறது.
வணிகர்கள் மக்களை ஈர்க்கும் விதமாக வியாபார நிறுவன வாயிலில் நடைமேடையை பெரும்பான்மையாக அலங்கார வடிவில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கடை வாயிலும் இரும்பு நடைபாதை அமைத்து தடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரதியார் சாலை, மாதா கோயில் சாலையோர வாகன நிறுத்தப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதையும் கடந்த சாலையில் கார், வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இருவழிச் சாலை என்பது ஒரு வழி சாலையாக மாறியிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட தூரத்தை யாராலும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாத நிலை நீடிக்கிறது. வணிக நிறுவனத்தாரின் செயல்களால் பொதுமக்கள், வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாவினர் என பல்வேறு தரப்பினரும் சொல்லொணா துயரங்களை தினமும் அனுபவிக்கின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்...
காரைக்கால் நகர சாலையோரங்களில் அசைவ உணவகங்கள் பெருகிவிட்டன. சாலையோரங்களில் அடுப்பு வைத்துக்கொண்டு சமைக்கும் செயலால், நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் நீர் வழியும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தீவிரமான ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் எதிர்ப்பு வலுத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும், இந்த பணி திங்கள்கிழமை முதல் தீவிரமான முறையில் அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சரியான திட்டமிடல் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைத் தொடங்கியிருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகமோ, உரிய திட்டமிடல், நிதி சேகரிப்புக்கான வழிகளைக் கண்டறிந்தே பணியைத் தொடங்கியிருப்பதாகவும், அடுத்த 3 மாதங்களில் நகரச் சாலைகளை அகலப்படுத்தி, வாகன நிறுத்த வசதியை செய்யும்போது இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படும் என தெரிவிக்கிறது.
எதிர்ப்பு...
எனினும், இத்திட்டத்துக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்கவில்லை. அதே வேளையில், ஆக்கிரமிப்புகள் எந்தெந்த முறையில் அகற்றப்படுகின்றன. அகற்றிய பின் எவ்வாறான சீரமைப்புகள் செய்யப்படுகின்றன.
இதற்கான திட்டம் என்ன, நிதி சேகரிப்பட்டதா போன்ற விவரங்களை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகளை அழைத்து கருத்துக் கேட்டிருக்க வேண்டும். தடாலடியாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைத்த விளம்பர தட்டிகளை உடைத்தெறிவதும், கடையின் முகப்பில் உள்ள தளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்த்தெறிவதும், கேள்வி கேட்பவர்களை பிணை இல்லாத பிரிவில் வழக்குப் பதிவு செய்வதும் அவசர நிலை பிரகடன காலத்தை நினைவுப்படுத்துகிறது.
விளம்பர தட்டிகள் விதியை மீறி வைக்கப்பட்டதாகக் கூறும் அரசுத்துறை, பல ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்கள் வரவேற்பு...
மாவட்ட நிர்வாகம் செய்திருக்கும் நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் பெரிதும் வரவேற்கின்றனர். குறிப்பாக இதில் அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளனர். வணிகர்களிடையே கூட இதற்கு ஒருபுறம் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை வணிகர்கள் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செய்யக்கூடியதாக பலரும் உணர்ந்திருக்கின்றனர். காரைக்காலில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும், இது தொலைநோக்குத் திட்டப்பணி எனவும், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அமைதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்காத வகையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தினமும் எந்தெந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன என்பதை அறிவித்து, பிரச்னையின்றி செய்வதுபோல காரைக்காலிலும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த்ராஜா சனிக்கிழமை கூறும்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் விவகாரத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால், மக்களைப் பாதிக்காத வகையில் சிறந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க முடியும் என்றார்.
அதேவேளையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறைவடைந்ததும் டெண்டர் விடும் பணி தொடங்கி, சாலையை அகலப்படுத்தி, வாகன நிறுத்த வசதியையும் செய்ய வேண்டும். இதற்கு காலக்கெடு நிர்ணயித்து பணிகளை செய்து முடித்தால், காரைக்கால் மக்கள் அடுத்த பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக நகரப் பகுதிக்கு வந்து வாகனங்களை நிறுத்தி பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்பதே பெருவாரியான மக்களின் வலியுறுத்தலாகும்.