சித்தி விநாயகர் கோயில் கனக துர்கைக்கு வெள்ளி அங்கி அணிவிப்பு
By DIN | Published On : 05th May 2019 01:35 AM | Last Updated : 05th May 2019 01:35 AM | அ+அ அ- |

சித்தி விநாயகர் கோயிலில் கனக துர்கைக்கு உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட வெள்ளி அங்கி வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
காரைக்கால் ஆற்றங்கரை அருகே உள்ள கைலாசநாதர் தேவஸ்தானத்துக்குள்பட்ட சித்தி விநாயகர் கோயிலில் கனக துர்கை சன்னிதி உள்ளது. துர்கைக்கு விசேஷ காலங்களில் சிறப்பு மலர் அலங்காரம் செய்து ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. துர்கைக்கு ரூ.1.25 லட்சம் செலவில் வெள்ளி அங்கியை காரைக்காலைச் சேர்ந்த வை.விமலாதித்தன் குடும்பத்தினர் உபயமாக தயாரித்து, கைலாசநாதர் கோயில் அறங்காவல் நிர்வாகத்தினரிடம் வியாழக்கிழமை அளித்தனர்.
கோயில் சன்னிதியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி அங்கியை வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி, புனிநீர் கொண்டு துர்கையம்மனுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வெள்ளி அங்கி சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கைலாசநாதர் கோயில் அறங்காவல் நிர்வாகப் பொருளாளர் டி.ரஞ்சன், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். விசேஷ காலங்களில் வெள்ளி அங்கி அணிவித்து ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.