ஆட்சியரை நாளை சந்திக்க வர்த்தக சங்கத்தினர் முடிவு
By DIN | Published On : 05th May 2019 01:36 AM | Last Updated : 05th May 2019 01:36 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்ட ஆட்சியரை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக திங்கள்கிழமை (மே 6) சந்திக்கப் போவதாக வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றதில் கடும் எதிர்ப்பு உருவாகியது. இதையொட்டி, காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வி.ஆனந்தன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குப் பின் தலைவர் வி.ஆனந்தன் கூறியது:
காரைக்கால் நகரப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும், வாகனங்கள் நிறுத்த முடியாத வகையிலும் பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்களினால் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், சாலையை விரிவுப்படுத்தி வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்போவதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
காரைக்கால் வளர்ச்சியிலோ, மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதிலோ குறுக்கீடு செய்ய வர்த்தகர்கள் முன்வரவில்லை. நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவும், சாலையை விரிவாக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் செய்யலாம். அதைவிடுத்து பல லட்ச ரூபாய் செலவு செய்து, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து நிபுணர்களை வரவழைத்து வைத்த டிஜிட்டல் போர்டுகளை உடைத்து அகற்றுவது என்பது ஏற்புடைய செயலாக இல்லை.
வணிகர்களுக்கு எதுவரை வணிக நிறுவனத்துக்கான நிலம், எதுவரை அரசு நிலம் உள்ளது என்பதை முறையாக தெளிவுப்படுத்த வேண்டும். வணிகர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...