குடமுழுக்கு விழாவில் பக்தரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: பெண் கைது
By DIN | Published On : 05th May 2019 01:35 AM | Last Updated : 05th May 2019 01:35 AM | அ+அ அ- |

திருமலைராயன்பட்டினம் பகுதி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தரிடம், தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் பகுதி திருமலைராஜனாற்றங்கரையில் ஓம்மொழியப்பர் (ஐயனார்) கோயில் குடமுழுக்கு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அருகே சில அமைப்பினர் அன்னதானம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்கு பக்தர்கள் திரண்டிருந்ததைப் பயன்படுத்தி, ஒரு பெண் அன்னதானம் வாங்க நின்ற மற்றொரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதையறிந்த போலீஸார் ஜெயக்குமார், முருகானந்தம் ஆகியோர் பெண் போலீஸார் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து, திருப்பட்டினம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட், அன்புநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஆதிலட்சுமி (54) என்பதும், இதுபோல் கோயில் விழாக்களுக்கு சென்று நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் வசமிருந்த சுமார் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபு, ஆதிலட்சுமியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...