திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 05th May 2019 01:37 AM | Last Updated : 05th May 2019 01:37 AM | அ+அ அ- |

காரைக்கால் நகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற விவகாரத்தில், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தலைமையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு 2 நாள் வணிகர்களுக்கு அவகாசம் தரப்பட்டது. யாரும் இதனை பொருள்படுத்தாததால் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய்த்துறை இணைந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை காரைக்கால் நேரு வீதியில் அரசலாறு பாலம் அருகிலிருந்து தொடங்கி பாரதியார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் ஈடுபட்டனர்.
பாரதியார் சாலையில் லெமேர் வீதி சந்திப்பு அருகே பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு கடையில் இருந்த விளம்பர தட்டியை அகற்றும்போது, அக்கடையில் இருந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம், தெற்குத் தொகுதி காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி என்கிற அப்துல் காதர் உள்ளிட்டோர் அந்த பகுதிக்குச் சென்றனர். இவர்களின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் அங்கு திரண்டனர். அங்கு போலீஸாருக்கும், எதிர்தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எந்தவித திட்டமும் இல்லாமல் வணிக நிறுவன வாயில் கட்டமைப்புகள் உடைக்கப்படுகின்றன. பல லட்சம் ரூபாய் செலவு செய்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றப்படுகின்றன. இதுகுறித்து சரியான முன் அறிவிப்பு செய்யப்படவில்லை. வணிகம் பாதித்து வணிகர்கள் பல்வேறு துயரத்தை சந்தித்திருக்கும்போது இந்த செயல் சரியானதா என அதிகாரிகள், போலீஸாரிடம் நாஜிம் கேட்டார்.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் எதிர்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் ராஜேந்திரன், காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார், முன்னாள் அமைச்சர் நாஜிம், காங்கிரஸ் தொகுதி தலைவர் அப்துல்காதர் மற்றும் சிலர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், கலைந்து செல்லாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...