தீர்த்தக் குளத்தில் நீராடும் கோயில் யானை
By DIN | Published On : 15th May 2019 08:57 AM | Last Updated : 15th May 2019 08:57 AM | அ+அ அ- |

திருநள்ளாறு கோயில் யானை பிரக்ருதி, கத்திரி வெயிலின் தாக்கத்தை தணிக்க தீர்த்தக் குளத்தில் தினமும் நீண்ட நேரம் நீராடிவருகிறது.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் யானை பிரக்ருதி, தினமும் காலை சுவாமிக்கு தீர்த்தம் கொண்டு செல்வற்காக அதிகாலை 4.30 மணியளவில் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் நீராடுவது வழக்கம். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கும். பிற்பகலில் சிறிது நேரம் குழாய் வழியே (ஷவர்) குளியலில் ஈடுபடும்.
தற்போது கத்திரி வெயில் காலமாக இருப்பதால், சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் ஆனந்தமாக நீராடியது யானை பிரக்ருதி. இதேபோல், தினமும் நீராடி வருகிறது.
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பிற்பகலில் குழாய் வழி குளியலுக்குப் பதில் குளத்தில் குளிக்க யானைக்கு ஆர்வம் ஏற்படுவதாகவும், குளத்தில் இறங்கினால் நீண்ட நேரம் மூழ்கி இருப்பதும், பின்னர் எழுந்து நிற்பதுமாக ஆனந்தமாக குளிப்பதாக பாகன் தரப்பில் தெரிவித்தனர்.