வணிக நிறுவனங்கள் தொழிலாளர் துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 08:58 AM | Last Updated : 15th May 2019 08:58 AM | அ+அ அ- |

காரைக்காலில் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தொழிலாளர் துறையிடம் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் அவற்றை சார்ந்த அலுவலகங்கள், பண்டக அறைகள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், எரிவாயு உருளைகள், வாகன எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மருந்து நிலையங்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், வர்த்தக சபை, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை மையங்கள், வேளாண் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் இறால் பொரிப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள், இறைச்சிக் கூடங்கள், பாதுகாப்பு முகமைகள், கூரியர் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை, புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ளுமாறு புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன்
ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
காரைக்காலில் இதுவரை பதிவு செய்யாதவர்கள், காரைக்கால் மதகடி பகுதி காமராஜர் வளாகம், 2-ஆவது தளம், தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்துள்ளோர் உரிய தொகை செலுத்தி புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்குவதை பணியமர்த்துவோர் உறுதி செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.