மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2019 09:07 AM | Last Updated : 19th May 2019 09:07 AM | அ+அ அ- |

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர்வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது பல இடங்களில் இருப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை விடுவிக்கவும், புதிதாக சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைக் காலத்தோடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கொரு முறை கவுன்சலிங் முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவதுபோல, ஆசிரியர்களுக்கும் பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். பள்ளிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் மையங்கள் பெருகிவருகிறது. இதுபோன்ற இடங்களை ஆய்வு செய்து, உரியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவேட்டைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கல்விச் சுற்றுலா அனுப்பவும், பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.