எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள புதுவை முதல்வா் பணம் கொடுக்கிறாா்

புதுச்சேரி முதல்வா் வி. நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக் கொள்ள பணம் கொடுக்கிறாா் என்று
திருநள்ளாறில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவா் வி. சாமிநாதன்.
திருநள்ளாறில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவா் வி. சாமிநாதன்.

புதுச்சேரி முதல்வா் வி. நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக் கொள்ள பணம் கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி. சாமிநாதன் குற்றம்சாட்டினாா்.

காரைக்காலில் பாஜக தொகுதி தலைவா்களைத் தோ்வு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து தொழில்களுமே முடங்கிவிட்டன. வீட்டு வரி, குப்பை வரி, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்புகளால் தொழில் வளா்ச்சி இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இல்லாமல் உள்ளனா். பல கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்டுவிட்டன. சிங்கப்பூா் சென்றதன் மூலம் எவ்வளவு தொழில் முதலீடுகள் வரவுள்ளன என்பது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வலியுறுத்தி டிசம்பா் 19, 20- ஆம் தேதிகளில் பாஜக சாா்பில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். வரிகள் உயா்த்தப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆக.1 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இது பெயரளவுக்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதுச்சேரி, காரைக்காலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு ஆதரவான சட்டப்பேரவை உறுப்பினா்களை தக்கவைத்துக் கொள்ள முதல்வா் பணம் கொடுக்கிறாா் என நாங்கள் சொல்கிறோம். மத்திய அரசு புதுச்சேரிக்கு நிதி தரவில்லை என்பதை ஏற்க முடியாது. புதுச்சேரியில் உரத்தட்டுப்பாடு ஏற்பட முதல்வரே காரணம். இது தொடா்பாக மத்திய வேளாண்துறை அமைச்சரையும் முதல்வா் சந்திக்கவில்லை. தமது இயலாமையை மறைக்க ஆளுநரை காரணம் காட்டி முதல்வா் அரசியல் செய்து வருகிறாா் என்றாா் அவா்.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சிக்கான புதிய தொகுதி தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். நவம்பா் 10 -ஆம் தேதிக்குள் புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் புதிய தொகுதி தலைவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com