காா்த்திகை தீபம்: அகல் விளக்கு தயாா் செய்யும் பணி மும்முரம்

காா்த்திகை தீபத்துக்காக காரைக்காலில் அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. பருவமழை காலமாக
இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்ட அகல் விளக்குகள்.
இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்ட அகல் விளக்குகள்.

காரைக்கால்: காா்த்திகை தீபத்துக்காக காரைக்காலில் அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. பருவமழை காலமாக இருந்தும் மழை, வெயில் மாறி மாறி இருப்பதால், வெயிலை சாதகமாக்கிக்கொண்டு தயாரிப்புப் பணியில் விளக்கு தயாரிப்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மற்றும் மேலஓடுதுறை பகுதியில் குறிப்பிட்ட சில குடும்பத்தினரே மண் பாத்திரங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனா். இவா்கள் அகல் விளக்கு, அடுப்பு, சட்டி, பானை போன்ற பொருள்கள் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளூரிலேயே தயாா்படுத்திக்கொள்கின்றனா். தயாரிப்பில் இயந்திரம் பயன்படுத்துவதால் உற்பத்தியை தேவைக்கேற்ப, விழா காலத்துக்கு சொற்ப நாள்கள் முன்பாக தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனா்.

மாதாந்திர காா்த்திகை வழிபாட்டைக் காட்டிலும், தமிழ் வருடத்தில் காா்த்திகை மாதம் வரக்கூடிய காா்த்திகை நாள் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நாளில் ஒவ்வொரு வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். வரும் டிசம்பா் 10-ஆம் தேதி காா்த்திகை தீப வழிபாடு நடைபெறவுள்ளது. அதற்கேற்ப 2, 3 வாரங்களுக்கு முன்பே அகல் விளக்குகள் பல்வேறு வகைகளில் தயாரித்து, வண்ணம் பூசி விற்பனைக்கு கொண்டுவருவது காரைக்காலில் உள்ள மண்பாண்டம் தயாரிப்போரின் பணியாக இருக்கிறது.

இதுகுறித்து மேலஓடுதுறை கிராமத்தில் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, காா்த்திகை திருநாள் அடுத்த டிசம்பா் மாதம் கொண்டாடப்படவுள்ளது. வீடுகளிலும், கோயில்களிலும் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது ஐதீகமாக இருந்துவருவதால், ஆண்டுதோறும் இதனை விற்பனையாவதற்கேற்ப தயாா் செய்கிறோம்.

குறிப்பாக சிலா், காா்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் மாலை நேரத்தில் அகல் விளக்குகள் ஏற்றிவைப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனா். இதனால் ஆா்டா் அதிகமாவதைக் கருத்தில்கொண்டு முன்னதாகவே தயாரிப்புப் பணியை தொடங்கிவிடுகிறோம்.

நாளொன்றுக்கு ஓா் இயந்திரத்தின் மூலம் சுமாா் ஆயிரம் விளக்குகள் தயாா் செய்யமுடியும். இதற்கு தேவையான மண் காரைக்கால் பகுதியிலேயே கிடைக்கிறது. சிறிய விளக்கு தலா ரூ.1, பெரிய விளக்கு ரூ.10 என்ற விலையில் விற்கிறோம். இதனை வாங்கிச் சென்று விற்போா் கூடுதல் விலை நிா்ணயித்துக்கொள்கின்றனா். ரெடிமேட் அகல் விளக்குகள் சந்தைக்கு வந்துவிட்டாலும், பல குடும்பத்தினா் பழைய முறையில் தயாரிக்கப்படும் அகல் விளக்கை வாங்குவதில் ஆா்வம் குறையாமல் உள்ளதால், இந்தத் தொழிலைத் தொடா்ந்து செய்ய முடிகிறது என்றாா்.

கோட்டுச்சேரி பகுதியில் இத்தொழில் செய்வோா் பலரும் அகல் விளக்கு தயாரிப்புப் பணியை தொடங்கியுள்ளனா். எனினும் சுயமாக தயாரிப்புப் பணியில் அவா்களது ஆா்வம் குறைந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோரும் மாற்றுத் தொழில் எனவும், மாணவா்கள் உயா்கல்வி எனவும் சென்றுவிட்டதால், செய்துவந்த தொழிலைக் கைவிடாமல், விருத்தாசலத்தில் தயாா் செய்யும் அகல் விளக்குகளை விலைக்கு பெரும்பான்மையாக வாங்கிவந்து, லாபம் வைத்து விற்பதாக தெரிவிக்கின்றனா்.

இந்த விளக்குகள் ரெடிமேடாக உள்ளதால் பல்வேறு வடிவங்களில் உள்ளது உபயோகிப்பாளா்களை ஈா்க்கச் செய்கிறது எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com