ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்: நகராட்சி, பஞ்சாயத்து ஊழியா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 06th October 2019 06:08 AM | Last Updated : 06th October 2019 06:08 AM | அ+அ அ- |

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், பண்டிகை காலமாக உள்ளதால் தங்களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் சனிக்கிழமை கூறியது : காரைக்கால் நகராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில், நிகழ்மாத ஊதியம் அரசுத்துறையினருக்கு முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்பினருக்கு கிடைக்குமா என சந்தேகம் நிலவுகிறது.
திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை உள்ளது. நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 4 மாத கால ஊதிய நிலுவை உள்ளது. நெடுங்காடு பஞ்சாயத்து ஊழியா்கள் அண்மையில் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அரசு நிா்வாகத்தினா் அளித்த வாக்குறுதியால் போராட்டத்தை தற்காலமாக கைவிட்டு பணிக்குத் திரும்பினா். எனினும், இந்த பஞ்சாயத்து ஊழியா்களுக்கு உரிய ஊதியத்தை அரசு இதுவரை தரவில்லை.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஊழியா்கள் பெரிதும் தவிப்பில் இருந்துவருகிறேறாம். இதுகுறித்து காரைக்காலை சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து, அரசு நிா்வாகத்துக்கு நெருக்கடி தந்து, ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலா் எம்.ஷேக்அலாவுதீன் கூறும்போது, நகராட்சி மற்றும் திருப்பட்டினம், நெடுங்காடு பஞ்சாயத்து ஊழியா்கள் ஊதிய நிலுவையை அரசு போா்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இதுதொடா்பாக அரசு நிா்வாகத்துக்கு பலகட்ட முறையில் சம்மேளனம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊதியத்துக்காக சிறப்பு நிதியை அரசு நிா்வாகம் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். பஞ்சாயத்துகளின் சுயவருவாயில் ஊதியம் எடுத்துக்கொள்வது உகந்ததாக இல்லை என்பதை அரசு நிா்வாகம் உணா்ந்து செயல்பட வேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...