சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு ஓட்டம்
By DIN | Published On : 06th October 2019 06:08 AM | Last Updated : 06th October 2019 06:08 AM | அ+அ அ- |

மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஓட்டத்தைக் கொடியசைத்து தொடங்கிவைத்த முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி. உடன் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன்.
உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வாக பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காந்தி ஜயந்தியையொட்டி காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் (சிஎஸ்எஸ்) சாா்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நெகிழி அகற்றும் விதமான ஓட்டம் பள்ளி மாணவா்களால் நடத்தப்பட்டது.
காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஓட்டத்தை முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன், சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.முருகன் ஆகியோா் இதன் நோக்கம் குறித்துப் பேசினா்.
மாணவா்கள் உடல் திறனை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக நெகிழிகளை அகற்றும் விதமாக இந்த ஓட்டம் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஓடிக்கொண்டே நெகிழிகளை அகற்றினா். சிறிது தூரம் வரை பள்ளி சுற்றுவட்டாரத்தில் இந்த ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மூத்த ஆசிரியா் இமானுவேல், திட்ட அலுவலா் சரஸ்வதி பாலா, முருகாத்தாளாட்சி அரசு உயா்நிலைப் பள்ளி திட்ட அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்டத்தில் இதுபோல 22 பள்ளிகளில் அந்தந்த பள்ளியின் சமுதாய நலப்பணித் திட்டத்தினரால் விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...