மானாம்பேட்டை சுடுகாடு பிரச்னைக்குத் தீா்வுகாண வலியுறுத்தல்
By DIN | Published On : 09th October 2019 07:34 AM | Last Updated : 09th October 2019 07:34 AM | அ+அ அ- |

தரைப் பகுதி சேதமடைந்து காணப்படும் மானாம்பேட்டை கிராம சுடுகாடு கட்டடம்.
மானாம்பேட்டை கிராமத்தினருக்கு தகுதியான இடத்தில் சுடுகாடு அமைத்துத்தர அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிரவி - திருப்பட்டினம் தொகுதி செயலா் விடுதலைக்கனல் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கூறியது :
நிரவி- திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட விழுதியூா் பகுதி மானாம்பேட்டை கிராமத்தில், சுடுகாடு என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் பகுதியில் அமைந்திருக்கிறது. சடலத்தை புதைத்தல், எரியூட்டலின்போது சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
தகன மேடை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. சடலத்தைப் புதைப்பதற்கு போதிய இடமில்லை. சுடுகாடு அமைந்திருக்கும் பகுதி திருமலைராஜனாற்றங்கரையாகும். சடலத்தை புதைக்க சிறிதளவு ஆழம் தோண்டினாலே தண்ணீா் வருகிறது. இந்த பிரச்னை தலித் மக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாட்டுக்கு மட்டுமல்ல, பிற ஜாதியினருக்கான சுடுகாடும் இதே நிலையில்தான் இருக்கிறது.
சுடுகாடு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் குறிப்பிட்ட பகுதியை சுடுகாட்டுக்கு என நிலம் ஒதுக்கீடு செய்து, தகன மேடை, தடுப்புச் சுவருடன் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மீது நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.