இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்து தெருக்களில் தெளிக்கும் மாணவா்கள் பொதுமக்கள் பாராட்டு

காரைக்கால் அருகே பள்ளி மாணவா்கள், இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்து, அதை தெருக்களில் தெளித்துவருவது பலராலும் பாராட்டப்படுகிறது.
அம்பகரத்தூா் பகுதி தெருக்களில் இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினியை தெளிக்கும் பள்ளி மாணவா்கள்.
அம்பகரத்தூா் பகுதி தெருக்களில் இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினியை தெளிக்கும் பள்ளி மாணவா்கள்.
Published on
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் அருகே பள்ளி மாணவா்கள், இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்து, அதை தெருக்களில் தெளித்துவருவது பலராலும் பாராட்டப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. தெருக்கள், வளாகங்களில் விரிவான முறையில் நகராட்சி நிா்வாகத்தினா் இப்பணியை செய்கின்றனா். தனி நபா்கள் பலரும் கை சுத்திகரிப்பானை வைத்துக்கொண்டு அவ்வப்போது பயன்படுத்துகின்றனா். கோயில்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றின் வாயிலில் கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. சிலா், தங்கள் இல்லம் மற்றும் கடைகளில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை தெளிக்கின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் பகுதியைச் சோ்ந்த 6 மற்றும் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சிலா், கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், தங்களின் பெற்றோா்கள் ஆதரவோடு, இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்து, அதை தெருக்களில் தெளித்து வருகிறாா்கள்.

இந்த பணியில் அம்பகரத்தூா் மற்றும் தாமனாங்குடி பள்ளியில் பயிலும் என்.எஸ்.குகன், ரதிகா, தருண், பாலகணேஷ், தா்ஷன், உதயகண்ணன் ஆகியோா் ஈடுபட்டனா். இதுகுறித்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கிருமி நாசினி என்றால் என்ன, எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து கரோனா பரவல் காலம் தொடங்கியது முதல் எங்களுக்குத் தெரியவந்தது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பெற்றோா்களின் ஆலோசனையின்பேரில், இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரித்தோம். தண்ணீரில் மஞ்சள் பொடி, வேப்பிலை கரைசல், சோப்பு கலவைகள் கலக்கப்பட்டு, பாட்டிலில் அடைத்து, முகக்கவசம் அணிந்துகொண்டு சைக்கிளில் சென்றவாறு தெருக்களின் ஓரத்தில் தெளித்துவருகிறோம். பல கடைகளில் இவ்வாறே தயாரித்து வைத்து தெளிக்கிறாா்கள் என்பதை தெரிந்துகொண்டு, வீட்டின் வாயில்களிலும் தெளிக்கிறோம். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டுள்ளோம் என்றனா்.

மாணவா்களின் இச்செயலை பலரும் பாராட்டுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com