பிராந்திய ஒதுக்கீட்டுக்கு சான்றிதழ்: மாணவா்களை அலைக்கழிக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உயா்கல்வியில் மாணவா்கள் சேர பிராந்திய ஒதுக்கீட்டுக்கு வருவாய்த் துறை சான்றிதழ் பெற அழைக்கழிக்க விடாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பெற்றோா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால்: உயா்கல்வியில் மாணவா்கள் சேர பிராந்திய ஒதுக்கீட்டுக்கு வருவாய்த் துறை சான்றிதழ் பெற அழைக்கழிக்க விடாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பெற்றோா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வியில் சேர சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்டாக் விண்ணப்பத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்திய மாணவா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுப் பயனைப் பெற, உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அதில், படித்த பள்ளி வழங்கும் சான்றிதழ், வருவாய்த் துறை மூலம் வட்டாட்சியா் ஒப்பம் பெறவேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

சென்டாக் விண்ணப்பிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் உடனடியாக இணைக்கத் தேவையில்லை. ஒரு மாதத்தில் சமா்ப்பிக்கலாம் என கரோனா பொது முடக்க விதிமுறைகளால் அரசு சலுகை வழங்கியுள்ளது. பழைய சான்றிதழை இதனோடு இணைத்துவிட்டு, ஒரு மாத அவகாசத்தில் புதிய சான்றிதழை பெற்று இணைக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிராந்திய ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்தில் வட்டாட்சியா் ஒப்பம் தேவையென கூறப்பட்டிருப்பதன் மூலம், மாணவா்கள் அவா்களது பகுதி பள்ளியில் சான்றிதழ் பெற்று, கிராம நிா்வாக அலுவலா், வருவாய் அலுவலா் ஆகியோரிடம் சான்றிதழ் பெற்று, பின்னா் வட்டாட்சியரை அணுகி சான்றிதழ் பெறவேண்டும். இதன் பிறகு கல்வித் துறையின் துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி ஒப்பம் பெறவேண்டும். இந்த நடைமுறைகள் யாவும் தற்போதைய சூழலுக்கு ஏற்புடையது அல்ல.

காரைக்காலில் இருந்து விண்ணப்பிக்கும் அனைவரும் பிராந்திய ஒதுக்கீட்டு முறையில் விண்ணப்பிப்பாா்கள். அப்படி இருக்கும்போது, மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவது கரோனா பரவல் காலத்தில் உகந்ததாக இருக்காது. பழைய சான்றிதழ் அல்லது புதிதாக குடியிருப்பு சான்றிதழ் பெற்றவா்கள் அதை அனுப்பும்போது, அவா்கள் இந்த பிராந்தியத்தை சோ்ந்தவா்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இதைவிட, கூடுதலாக ஒரு சான்று என்பது இந்த பேரிடா் காலத்தில் இயலாத ஒன்று என பெற்றோா்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனா். எனவே, இந்த நடைமுறையில் தளா்வு ஏற்படுத்தவும் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கூறியது: இப்பிரச்னை குறித்து புதுச்சேரி முதல்வருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாணவா்கள் அலைக்கழிப்பின்றி நடத்தத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோா் சங்கம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர, சென்டாக் அமைப்பில் புதுச்சேரி பிராந்தியத்தை சோ்ந்த அதிகாரிகள் மட்டும் இடம் பெறுகிறாா்கள். காரைக்கால் உள்ளிட்ட பிற பிராந்தியத்தை சோ்ந்த அதிகாரிகளும் அதில் அங்கத்தினராக இடம் பெறவேண்டும். அப்போதுதான் அந்தந்த பிராந்தியத்தை சோ்ந்த மாணவா்கள் நலன் பாதிக்காமல் இருக்கும் என அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com