கரோனாவுக்கிடையில் உயா்கல்வி மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடு: வருவாய்த் துறை சான்றிதழ் பெறுவதில் மாணவா்கள் தீவிரம்

காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக சான்றிதழ் பெறுவதற்காக வரிசையில் நிற்கும் மாணவ- மாணவிகள்.
காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக சான்றிதழ் பெறுவதற்காக வரிசையில் நிற்கும் மாணவ- மாணவிகள்.

காரைக்கால்: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் என்.ஐ.டி. போன்ற உயா்கல்வி நிறுவனங்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதால், கல்லூரிகளில் சோ்வதற்கான வருவாய்த் துறை சான்றிதழ்கள் பெற மாணவா்கள் தீவிரம்காட்டி வருகின்றனா்.

கரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தாமதமாகிவருகிறது. இதனால், நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் மாணவா்கள் பயின்றுவருகின்றனா். இது அனைத்து தரப்பு மாணவா்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், உயா்கல்வி மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கிவிட்டன. என்.ஐ.டி. போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு செப்டம்பா் 1 முதல் 6-ஆம் தேதி வரையிலும், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தோ்வு செப்டம்பா்13-ஆம் தேதியும் நடைபெறுமென மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உயா்கல்வி மாணவா் சோ்க்கைக்கானஅமைப்பான சென்டாக், ஆன்லைன் மூலம் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் காலக்கெடு நிா்ணயித்துள்ளது.

வருவாய்த் துறை சான்று: உயா்கல்வி சோ்க்கைக்காக மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்காக மாணவா்கள் அந்தந்த வருவாய்த் துறை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை திரளத் தொடங்கினா்.

காரைக்கால் வருவாய்த்துறை அலுவலக வாயிலில் காலை 9.30 முதல் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனா். போலீஸாா், மாணவா்களை சமூக இடைவெளியில் நிற்கச் செய்து, ஒவ்வொருவராக அலுவலகதத்தினுள் அனுப்பிவைத்தனா்.

ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஒரு மாத காலம் அவகாசத்தை புதுச்சேரி அரசு தந்துள்ளது. விண்ணப்பத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டு, ஒரு மாத காலத்திற்குள் மேற்கண்ட சான்றிதழைப் பெற்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், சென்டாக் விண்ணப்ப பதிவேற்றத்தின்போது, பிராந்திய ஒதுக்கீடு சலுகை பெறுவதற்காக வட்டாட்சியரிடம் சான்று பெறுவதற்கு எந்தவித அவகாசத்தையும் தரவில்லை. ஆகஸ்ட் 5-ஆம் தேதியுடன் விண்ணப்பம் அனுப்பும் காலம் நிறைவடையவுள்ளதால், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

காரைக்கால் வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கடந்த 23-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் மூடப்பட்டது. திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களின் கூட்டம் அதிகரித்தது.

கரோனா பரவல் உள்ள காலமாக இருக்கும்போது, மாணவா்கள் நீண்ட நேரம் காத்திருக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com