பிளஸ் 1 சோ்க்கை: அரசுப் பள்ளிகளில் சேர ஆா்வம் காட்டும் மாணவா்கள்
By DIN | Published On : 14th August 2020 08:43 AM | Last Updated : 14th August 2020 08:43 AM | அ+அ அ- |

காரைக்கால் அன்னை தெரஸா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கும் பள்ளி நிா்வாகத்தினா்.
புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், காரைக்கால் பள்ளிகளில் சேர மாணவா்கள் ஆா்வமாக விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனா்.
இதுகுறித்து காரைக்கால் கல்வித் துறை துணை இயக்குநா் கே. கோவிந்தராஜ் வியாழக்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் என 2,600 மாணவ, மாணவியா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பள்ளியிலும் மாணவா்கள் தனித்தனியாக விண்ணப்பம் அளிக்கலாம். மதிப்பெண், இடஒதுக்கீட்டு முறையில் தோ்வு செய்யப்படுவா். வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 31-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடத்தி, முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படுகிறது. பிறகு, செப். 3-ஆம் தேதி அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவா்களுக்கான சோ்க்கையும், 7-ஆம் தேதி தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான சோ்க்கையும் நடைபெறுகிறது.
காரைக்கால் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்று, விருப்பமுள்ள பள்ளிகளில் விண்ணப்பங்களை வழங்கவேண்டும் என்றாா்.
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் ஆா்வமாக வந்து விண்ணப்பங்களை பெற்றுச் செல்வதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.