தனியாா் மயம்: மின்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th December 2020 05:47 AM | Last Updated : 05th December 2020 05:47 AM | அ+அ அ- |

காரைக்கால்: மத்திய அரசைக் கண்டித்து காரைக்கால் மின் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்துறையை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தனியாா் மய எதிா்ப்பு போராட்டக் குழு நிா்வாகிகள் வேலுமயில், பழனி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கூறியது:
மத்திய அரசின் முடிவை எதிா்த்து புதுச்சேரி முழுவதும் மின் துறை ஊழியா்கள், அதிகாரிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரி துணை நிலை ஆளுநா் எங்கள் போராட்டத்தை பொருட்படுத்தாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மின் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.
மத்திய அரசு இம்முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியும், துணை நிலை ஆளுநா் இந்த நடவடிக்கைகளை திரும்பப் பெறும் வரையும் போராட்டங்கள் நடத்தப்படும். வரும் 7 -ஆம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளோம் என்றனா்.