புரெவி புயல்: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து மக்கள் அவதி
By DIN | Published On : 05th December 2020 05:46 AM | Last Updated : 05th December 2020 05:46 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் புரெவி புயலால் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்ததுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினா்.
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்துவருகிறது. வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு மற்றும் காரைக்கால் நகரின் சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. அத்துடன், தாழ்வான சாலைகளில் தண்ணீா் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கன மழையால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினா். வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. திருப்பட்டினம், நிரவி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மின் தடை ஏற்பட்டது.
திருநள்ளாறு பகுதியில் நல்லெழந்தூா் காலனித் தெரு, சோனியாகாந்தி நகா், நல்லம்பல் கீழத்தெரு, தோப்புத் தெரு, தென்னங்குடி மாதா கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் நேரில் சென்று பாதிப்புகளை பாா்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா். அத்துடன், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள், பள்ளிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி கல்வித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
இதற்கிடையில், திருமலைராயன்பட்டினத்தில் திருமலைராஜனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பொதுப்பணித் துறையினா் விரைந்து செயல்பட்டு, கடைமடை மதகுகளை முழுவதுமாக திறந்து, தண்ணீரை வெளியேற்றினா்.
பல இடங்களில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால்களில் அடைப்பை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசியல் கட்சியினா், சமூக நல அமைப்பினா் உள்ளிட்டோரும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...