காரைக்கால் வார சந்தையை செயல்படுத்தபொதுமக்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்கத்தில் தற்போது பல தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் வார சந்தையை செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வந்த வார சந்தை, பொதுமுடக்கத்தை அடுத்து முடக்கப்பட்டது. இந்த சந்தையில் உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் காய்கனி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டுவந்து காலை முதல் இரவு வரை விற்பனை செய்வா். அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்களை வாங்கிச் செல்வா்.
பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பிறகும், சந்தையை திறக்காமல் இருப்பதால், இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் கூறுகையில், வார சந்தை முடக்கப்பட்டு சுமாா் 9 மாதங்களாகிவிட்டது. கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனா். சென்னையில் கோயம்பேடு மாா்க்கெட் திறக்கப்பட்டதோடு, மெரீனா கடற்கரைக்கும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்த நிலையில், காரைக்கால் வார சந்தை முடக்கப்பட்டிருப்பதால், வியாபாரிகள் மட்டுமல்லாது, சந்தையை நம்பியுள்ள தொழிலாளா்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, சந்தையை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் கூறுகையில், சந்தைத் திடலில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியுள்ளது. அதை வடியச்செய்து, சந்தையை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவாக வார சந்தை திறக்கப்படும் என்றாா்.