நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில்திருவத்யயன உத்ஸவம் இன்று தொடக்கம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து என்னும் திருவத்யயன உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (டிச. 15) தொடங்குகிறது.
இக்கோயிலில், மூலவராக சயனநிலையில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளும், உத்ஸவராக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளும் அருள்பாலிக்கின்றனா். இங்கு ஆண்டுதோறும் பகல் பத்து, இராப்பத்து என்னும் திருவத்யயன உத்ஸவம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பாசுரங்கள் படித்தலுடன் தினமும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
நிகழாண்டு, முதல் பத்து நாள், திருமொழித் திருநாளாக (பகல் பத்து) செவ்வாய்க்கிழமை (டிச. 15) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 25 ஆம் தேதி இராப்பத்து தொடக்கமாக, பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இராப்பத்து நிகழ்ச்சியின் நிறைவில் திருவேடுபறி உத்ஸவம், நம்மாழ்வாா் மோட்சம், இயற்பா சாற்றுமுறை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
பகல் பத்து, இராப்பத்து நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுவாா். ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையில் பாசுரங்கள் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதா், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா் செய்துள்ளனா்.