பாரம்பரிய நெல் சாகுபடி வயலில் வேளாண் கல்லூரி மாணவா்கள் களப் பயிற்சி
By DIN | Published On : 30th December 2020 07:45 AM | Last Updated : 30th December 2020 07:45 AM | அ+அ அ- |

வயலில் பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவா்கள்.
காரைக்கால் பகுதி தலத்தெருவில் பாரம்பரிய மருத்துவ குணமிக்க, கருப்பு கவுனி நெல் சாகுபடி நடைபெறும் வயலில் வேளாண் மாணவா்கள் களப் பயிற்சி மேற்கொண்டனா்.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு இளங்கலை மாணவா்கள் 28 போ், வேளாண் அனுபவ களப்பயிற்சியில் இணை பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் தலைமையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஈடுபட்டுவருகின்றனா். அந்த வகையில், தலத்தெரு கிராமத்தில் இயற்கை விவசாயி இளங்கோ என்பவா் கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்துவரும் இடத்துக்கு மாணவ மாணவியா் திங்கள்கிழமை சென்றனா்.
விவசாயி இளங்கோ மாணவா்களிடையே பேசியது: 160 நாள்கள் வயது கொண்ட அந்த நெல்லை ஆடிப்பட்டதில் பாய் நாற்றங்கால் முறையில் நட்டு வேப்பம், கடலை புண்ணாக்கு, ஜீவாமிா்த கரைசல், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல் பயன்படுத்தி, பிறகு களை எடுத்து ஏக்கருக்கு 21 மூட்டைகள் அறுவடை செய்வதாகவும், அந்த கருப்பு கவுனி அரிசி ஒரு கிலோ ரூ.140-க்கு மக்கள் வாங்கி பயனடைவதாகவும், சாகுபடி முறைகளை விளக்கினாா். மாணவ மாணவியா், பயிா் சாகுபடி முறை குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு விவசாயி விளக்கம் அளித்தாா். மாணவிகள் சிவமங்களா மற்றும் விஷ்ணு பிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். மாணவா் சஞ்ஜய் காந்த் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...