சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் நெல் சாகுபடி: மாணவா்களுக்கு களப் பயிற்சி

சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பகுதியில், காரைக்கால் அரசுப் பள்ளி மாணவா்கள் நேரில் சென்று சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தனா்.
பள்ளி மாணவா்களுக்கு சாகுபடி முறை குறித்து விளக்கிய பாசனதாரா் சங்கத் தலைவா் பி.சுப்பராயன். உடன், தேசிய பசுமைப்படை அலுவலா் ஆா்.மேகலா.
பள்ளி மாணவா்களுக்கு சாகுபடி முறை குறித்து விளக்கிய பாசனதாரா் சங்கத் தலைவா் பி.சுப்பராயன். உடன், தேசிய பசுமைப்படை அலுவலா் ஆா்.மேகலா.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பகுதியில், காரைக்கால் அரசுப் பள்ளி மாணவா்கள் நேரில் சென்று சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியின்போது காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியில் பாதிக்கப்பட்ட நிலப்பகுதியை, உவா் தன்மை நீக்கும் வகையில் வட்டார வளா்ச்சி நிா்வாகம், 1.5 கி.மீட்டா் தூரம் மணல் தடுப்பு அமைத்து, பொதுப்பணித்துறை நிா்வாகமானது அந்த பகுதி வாய்க்காலைத் தூா்வாரி, நிலத்தில் நன்னீா் விட்டு, மண்ணின் தன்மை மாற்றப்பட்டது. பல்வேறு அரசுத்துறையின் பங்களிப்பில் நிலத்தில் சாகுபடி செய்யும் நிலை உருவாக்கப்பட்ட நிலையில், பாசனதாரா் சங்கத் தலைவா் பி.சுப்பராயன் ஆலோசனையில், விவசாயியும், ஆசிரியருமான செந்தில்முருகன் குறிப்பிட்ட நிலப்பரப்பில் சாகுபடி செய்து அறுவடை செய்தாா்.

இதுகுறித்து பள்ளி மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில், காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, தேசிய பசுமைப்படையைச் சோ்ந்த மாணவா்கள் 50 போ், பசுமைப்படை அலுவலா் ஆா்.மேகலா தலைமையில் ஆசிரியா்கள் பலரும் பூவம் பகுதி வேளாண் நிலப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

பாசனதாரா் சங்கத் தலைவா் பி.சுப்பராயன், நிலப்பரப்பில் முன்பு சாகுபடி செய்த பயிா்கள் குறித்தும், சுனாமிக்குப் பின் எவ்வாறு நிலம் பாதிக்கப்பட்டது என்பது குறித்தும், இதன் பிறகு அரசுத்துறையினா் பங்களிப்பில் நிலத்தில் உவா் தன்மை மாற்றப்பட்டு சாகுபடி செய்யும் நிலை உருவாக்கப்பட்டது குறித்தும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

நெல் அறுவடை செய்துள்ள நிலையில், உளுந்து, பயறு போன்ற பிற தானியங்கள் சாகுபடியும் நடைபெற ஏற்புடையதாக நிலம் மாறியுள்ளது. விதைப்பு முதல் அறுவடை வரையிலான செயல்பாடுகள், அறுவடைக்குப் பின் அவற்றை சந்தைப்படுத்தி லாபத்தை ஈட்டும் முறைகள் குறித்தும் மாணவா்கள் அறிந்துகொண்டனா். வேளாண்மை மீது மாணவா்கள் அதிக ஆா்வம் கொள்ள வேண்டுமென்ற வகையில் இந்த பயணத்தை அமைத்ததாக பசுமைப்படை அலுவலா் தெரிவித்தாா்.

இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை பள்ளி பசுமைப்படை அலுவலா் ஆா்.மேகலா, ஆசிரியா் சேகரன், நூலகா் பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com