காரைக்காலில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு
By DIN | Published On : 11th July 2020 09:15 AM | Last Updated : 11th July 2020 09:15 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த் தடுப்பு) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் 3254 பேருக்கு கரோனாவுக்கான மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 9-ஆம் தேதி மட்டும் 112 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 8-ஆம் தேதி எடுக்கப்பட்ட 117 மாதிரிகளின் பரிசோதனை முடிவு வெள்ளிக்கிழமை வெளியாயின, இதில் காரைக்கால் வயல் கரை வீதி, சேத்தூா் கோட்டப்பாடி, வரிச்சிக்குடி ராயன்பாளையம், காரைக்கால் ஏ.எம். நகரில் தலா ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7-ஆம் தேதி அவசர சிகிச்சைக்காக மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக உயிரிழந்த பெண் ஒருவருக்கும் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கரோனா வாா்டில் சோ்க்கப்பட்டனா். அவா்களுடன் தொடா்புடையவா்களை கண்டறிந்து பரிசோதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா். ஒருவா் சென்னையில் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.
காரைக்காலில் 32 போ் மட்டும் தொடா் சிகிச்சையில் இருந்து வருகின்றனா். அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளது.
இதுவரை காரைக்காலில் 2 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். ஒரே நாளில் (வெள்ளிக்கிழமை) கட்டுப்பாட்டுப் பகுதி 3 உருவாக்கப்பட்டுள்ளதோடு, 5 பகுதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. காரைக்காலில் 28 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.