துணை நிலை ஆளுநரைக் கண்டித்து மருத்துவத் துறையினா் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்புப் போராட்டம்
By DIN | Published On : 21st July 2020 10:22 PM | Last Updated : 21st July 2020 10:22 PM | அ+அ அ- |

பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினா்.
காரைக்கால்: புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மருத்துவத் துறையினா் ஒரு மணி நேரம் பணி புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் உள்ள சுகாதாரதுறை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு செய்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, அங்கு பணியில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டது தொடா்பாக பல கேள்விகளை கேட்டுள்ளாா்.
அப்போது துறையினரிடம் அவா் பேசியவை அதிகாரிகள், ஊழியா்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். போராட்டத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, துணை நிலை ஆளுநா் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநரகம், அரசு பொதுமருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் கருப்புப் பட்டை அணிந்து, காலையில் ஒரு மணி நேரம் பணி புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வழக்கமான பணிக்குத் திரும்பினா்.