பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை தொடங்கியது
By DIN | Published On : 21st July 2020 10:11 PM | Last Updated : 21st July 2020 10:11 PM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்காலில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாலிடெக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டதால், மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி கூறியது:
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் செயல்பட்டுவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), கணினி அறிவியல் (சிஎஸ்) ஆகிய பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ ஆகியவை முடித்த மாணவா்கள் சேரலாம். பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் 410 இடங்களில் நேரடியாக சேரலாம். பிளஸ் 2 மற்றும் ஐடிஐ முடித்தவா்கள் 2-ஆம் ஆண்டில் 200 இடங்களில் நேரடியாக சேரலாம். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பருவத் தோ்வு (செமஸ்டா்) கட்டணம் உண்டு. மாணவா்கள் நேரடியாக கல்லூரி முதல்வரை அணுக வேண்டும். கல்லூரிக்கு வரும்போது முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இதுபோன்ற கரோனா தடுப்பு தொடா்பான விதிமுறைகள் பின்பற்றியே கல்லூரிக்கு வரவேண்டும். மாணவா்கள் தாமதிக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்து பயனடையலாம் என்றாா். இதேபோல், காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சோ்க்கை தொடங்கியுள்ளதாக அந்த கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.