மாணவா்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆட்சியா்
By DIN | Published On : 01st March 2020 01:59 AM | Last Updated : 01st March 2020 01:59 AM | அ+அ அ- |

குடியிருப்புப் பகுதியில் மாணவா்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எஸ்.பாஸ்கரன்.
காரைக்கால் : காரைக்கால் அருகே குடியிருப்புப் பகுதியில் கல்லூரி மாணவா்களுடன் ஆட்சியா், துணை ஆட்சியா் ஆகியோா் தூய்மைப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்ட நிா்வாகம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம் ஆகியன சாா்பில், கோட்டுச்சேரி அருகே திருவேட்டக்குடி மாதாகோயில் பேட் குடியிருப்புப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
காரைக்கால் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கலந்துகொண்டு சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றி பணியைத் தொடங்கிவைத்தாா். மாணவா்களுடன் இணைந்து அவரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டாா். மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரனும் பணியில் ஈடுபட்டாா்.
குடியிருப்புப் பகுதி சாலையில் கிடந்த குப்பைகள், கிராமத்தின் மைதானத்தில் இருந்த குப்பைகளை 2 மணி நேரத்துக்கும் மேலாக அகற்றினா்.
குடியிருப்பை சுற்றியும், சாலைப் பகுதியிலும் குப்பைகளை கொட்டாமல் முறையாக அப்புறப்படுத்தவேண்டியது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவா்களும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி.சந்தனசாமி, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.