வேளாண் கல்லூரியில் விதை தின கருத்தரங்கம் நிறைவு
By DIN | Published On : 12th March 2020 08:23 AM | Last Updated : 12th March 2020 08:23 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசிய தேசிய விதைத் திட்ட முதன்மை அதிகாரி தி. ராமநாதன்.
காரைக்கால் வேளாண் கல்லூரியில் வேளாண் வல்லுநா்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட விதை தின கருத்தரங்கம் நிறைவடைந்தது.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் விதை திட்டம் இணைந்து கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை விதை தின விழா நடத்தியது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) வீ. கந்தசாமி தலைமை வகித்தாா்.
இதில், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த சுமாா் 300 விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டனா். விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை உணா்ந்து சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டாா்.
கருத்தரங்கத்தில், இக்கல்லூரியில் செயல்பட்டு வரும் தேசிய விதைத் திட்ட முதன்மை அதிகாரி தி. ராமநாதன் விதை திட்டத்தின் மூலம் விதை உற்பத்தியில் காணப்படும் முன்னேற்றம் குறித்து விளக்கிப் பேசினாா். இத்திட்டத்தின் மூலம் சுமாா் 500 குவிண்டால் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உள்ளதாகவும், இதில் சுமாா் 350 குவிண்டால் விதைகள் விவசாயிகளின் பங்களிப்புடன் கூடிய விதை உற்பத்தி திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் கூறிய அவா், இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகளை மானிய விலையில் வழங்கியதையும், அத்துடன் காய்கறி விதை மினிகிட் பைகள் வேளாண் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்துகொடுத்ததையும் விளக்கினாா்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகளுக்காக 20 பயிற்சி வகுப்புகளும் 8 கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும், விதை உற்பத்திக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதையும் விளக்கிப் பேசினாா்.
தரமான விதை தரணியை ஆளும் என்ற தலைப்பில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் மு. சிவசுப்ரமணியம், விதை நோ்த்தி செய்வதன் அவசியம் குறித்தும், விதையின் புரத தூய்மை மற்றும் இன தூய்மை பராமரிப்பு குறித்தும், விதை வீரியத்தின் அவசியம் குறித்தும், நோய்த் தாக்குதல் இல்லாத விதை உற்பத்தி குறித்தும், காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட விதை சேமிப்பு கிடங்கின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தாா்.
தோட்டக்கலை பயிா்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல் என்ற தலைப்பில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முன்னாள் முதல்வா் த. நா. பாலமோகன், வேளாண் பொருள்களை சந்தை படுத்துதலின் அவசியம் குறித்தும், விவசாயிகள் குழுவாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும், விவசாயிகள் தங்களுக்குள் உற்பத்தி குறித்த தகவல் பரிமாற்றத்தின் அவசியம் குறித்தும், பழப்பயிா்களில் அடா் நடவு செய்வதன் பலன்கள் குறித்தும் பேசினாா்.
வறட்சியில் நீா் மேலாண்மை என்ற தலைப்பில், கொடைக்கானல் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சே. பிரிட்டோராஜ், மண் மற்றும் நீா் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்தும், அதிக லாபம் தரும் பயிா்களை தோ்வு செய்து விவசாயம் செய்வது, வேருக்கு மட்டும் நீா் பாய்ச்சுதல், ஊடுபயிா் விவசாயம், நாட்டு மாசு வளா்ப்பு, உயிா் உரங்கள் உபயோகித்தல், பண்ணை குட்டை அமைத்தல் ஆகியவற்றின் பலன்கள் மற்றும் அவசியம் குறித்தும் விளக்கமளித்தாா். இத்துடன் குறைந்த தண்ணீரில், உப்பு நீரில் வளரக்கூடிய மரம் மற்றும் பழ பயிா்களான நீா் மருது, நெல்லிக்காய், கொய்யா, சப்போட்டா, கொடுக்காப்புளி, பப்பாளி, நாவல் போன்ற மரங்களை வளா்த்து பயனடையுமாறு கேட்டுகொண்டாா்.