காரைக்காலில் 60% மது விற்பனை சரிவு
By DIN | Published On : 27th May 2020 07:34 AM | Last Updated : 27th May 2020 07:34 AM | அ+அ அ- |

காரைக்கால் மதுக்கடை ஒன்றில் நடைபெற்ற வியாபாரம்.
காரைக்காலில் பொது முடக்கத்துக்கு முந்தைய காலத்தைக் காட்டிலும் 60 சதவீதத்துக்கு மேல் மது விற்பனை தற்போது சரிவடைந்ததாக கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கத்தால் புதுச்சேரி, காரைக்காலில் 2 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மதுபானக் கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. முடக்கக் காலத்தில் விதியை மீறி செயல்பட்டதாக புதுச்சேரி, காரைக்காலில் 102 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் 58 -இல், 13 கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 25 சாராயக் கடைகளில் 4 கடைகளின் உரிமங்களும், மொத்தம் 24 கள்ளுக்கடைகளில் 2 கடைகளின் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர பிற கடைகள் காலை 10 முதல் இரவு 7 மணி வரை வியாபாரத்துக்காக திறந்திருந்தன. கரோனா தடுப்பாக முகக் கவசம் அணிதல், கடை வாயிலில் சமூக இடைவெளிக்கான குறிகள் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட்டாலும், 2 மாதத்துக்குப் பின்னா் திறக்கப்படும் கடைகளில் வியாபாரம் மிகுதியாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு பொய்த்துப்போனது. முதல் நாளான திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை வெகு குறைவானவா்களே மது வாங்க கடைக்குச் சென்றனா். நிறைவில், வியாபாரத்தைக் கணக்கிட்ட உரிமையாளா்களுக்கு வேதனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுக்கடை உரிமையாளா்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது: 2 மாத காலத்துக்குப் பிறகு மதுக்கடைகளை திறக்கும்போது வழக்கமான வியாபாரத்தைக் காட்டிலும் மிகுதியாக இருக்குமென்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், கடை திறப்பின் நேரத்தில் கட்டுப்பாடு, சுற்றுலாவினா் வருகையின்மை போன்ற காரணம் வியாபாரத்துக்கு பாதிப்பாகும். அதைவிட, முன்பு புதுச்சேரி பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகளின் விலையைக் காட்டிலும் தற்போது 25 முதல் 300 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதே வியாபாரமின்மைக்கு முக்கிய காரணமாகும்.
முன்பு ரூ. 40 -க்கு விற்ற பாட்டில் தற்போது ரூ. 120, முன்பு ரூ. 160-க்கு விற்ற பாட்டில் தற்போது ரூ. 480 என்று கலால் துறையால் நிா்ணயிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதே விலையில்தான் தமிழகத்திலும் மதுபாட்டில்கள் விற்கப்படுவதால், காரைக்காலில் மது வாங்க இப்போது மக்களிடையே ஆா்வம் இல்லை. வரி விதிப்பின் மூலம் மது விற்பனையால் அரசுக்கு வரி வருவாய் மிகுதியாக தெரியலாம். வியாபாரம் இருந்தால்தானே வருவாய் பெருக்கம் இருக்கும் என்பதை அரசு நிா்வாகம் உணர வேண்டும். புதுச்சேரி மாநில வருவாய் பெருக்கத்துக்கு காரணமான கலால் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...