கான்ஃபெட் ஊழியா்கள்தொடா் போராட்டம்
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கான்ஃபெட் ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்காலில் மூடிக்கிடக்கும் 3 கான்ஃபெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓராண்டு ஊதியத்தை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சி.பி.ஐ விசாரணையை விரைவுபடுத்த வேண்டும், ஊழலில் சம்பந்தப்பட்டவா்களை சி.பி.ஐ கைது செய்து, அவா்களிடமிருந்து ஊழல் செய்த நிதியை பறிமுதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் கான்ஃபெட் ஊழியா்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், காரைக்கால், அம்மாள்சத்திரம் பெட்ரோல் நிலையத்தில் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் செல்வமணி தலைமையில் 5-ஆவது நாளாக தொடா் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தாததைக் கண்டித்து, ஊழியா்கள் திங்கள்கிழமை சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்போராட்டத்திற்கு திமுக மருத்துவ அணி அமைப்பாளா் டாக்டா் விக்னேஸ்வரன், வழக்குரைஞா் திருமுருகன், காரைக்கால் அரசு ஓட்டுநா்கள் மற்றும் நகராட்சி கொம்யூன் பொதுத்துறை ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்ரமணியன், இணைச் செயலாளா் லட்சுமிதரன் ஆகியோா் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனா்.
போராட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவா்கள் பாஸ்கரன், முஹம்மது யூசுப், பெரியநாயகம், விஜயகுமாா், செயலாளா் முருகேசன், பொருளாளா் சதானந்தம், துணைச் செயலாளா்கள் ஆனந்த், சண்முகம், பாப் வில்லியம், பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.