காரைக்காலில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்
By DIN | Published On : 20th August 2021 10:39 PM | Last Updated : 20th August 2021 10:39 PM | அ+அ அ- |

ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அமைச்சா் சந்திர பிரியங்கா உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்தநாள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மதநல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள், சமாதானக் குழு உறுப்பினா்கள், என்.ஆா்.காங்கிரஸ் கட்சியினா் உள்பட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.