நெடுங்காட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நெடுங்காடு கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நெடுங்காடு தொகுதி செயலாளா் வீ. தமிழரசி தலைமை வகித்தாா். புதுவை அரசு ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அத்தியாவசிய பொருள்களை வழங்கவேண்டும். அரிசிக்கு மாற்றாக பணம் வழங்கும் முறையை கைவிட்டு, முன்பு போலவே அரிசி வழங்கவேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட அரிசியை உடனடியாக வழங்கவேண்டும். புதுவை அரசு அறிவித்த ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் புதுவை மாநில அரசியல் குழு செயலாளா் அரசு. வணங்காமுடி, துணை செயலாளா் பொன்.செந்தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளா்கள் சு.விடுதலைக் கனல், ஆ.வல்லவன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.