காரைக்காலில் பள்ளிகள் திறப்பு: ஆர்வமாக வந்த மாணவர்கள்

பொது முடக்கத் தளர்வுகளின் அடிப்படையில், காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. மாணவர்கள் பெரும்பான்மையினர் ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றனர்.
காரைக்காலில் பள்ளிகள் திறப்பு.
காரைக்காலில் பள்ளிகள் திறப்பு.

பொது முடக்கத் தளர்வுகளின் அடிப்படையில், காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. மாணவர்கள் பெரும்பான்மையினர் ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றனர்.

புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பாடங்கள் குறித்து சந்தேகங்களை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் தெளிவுப்படுத்திக்கொள்ள ஏதுவாக, கரோனா பொது முடக்க தளர்வுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்.8-ஆம் தேதி முதல் பள்ளிகளை அரசு திறந்தது. மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இதில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இருந்துவந்தனர்.

தனியார் பள்ளிகளில் இணையவழிக் கல்வி வகுப்பு நடந்தாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஜன.4-ஆம் தேதி முதல் பள்ளிளுக்குச் செல்லலாம், பகல் 10 முதல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி அரசின் கல்வித்துறை அறிவிப்பு செய்தது. கரோனா பரவல் உள்ள காலத்தில் பள்ளிகள் திறக்கக்கூடாது என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

எனினும் மாணவர்கள் நலன் கருதி முடிவில் அரசு பின்வாங்காமல் இருந்தது. அரசின் அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு அவரவர் பள்ளி சீருடை அணிந்து மாணவ மாணவியர் சென்றனர். பெற்றோரிடமிருந்து பள்ளிக்கு அனுப்பிவைக்கும் ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்கள் வரவேண்டும், வருகைப் பதிவு கட்டாயமில்லை போன்ற அறிவுறுத்தலின்படி மாணவர்கள் சென்றனர். பள்ளி வாயிலிலேயே மாணவர்களுக்கு கை சுத்திகரிப்பான் தரப்பட்டது.

வெப்பமானி மூலம் சோதனை செய்யப்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  முகக் கவசம் அணிந்துள்ளார்களா என பரிசோதிக்கப்பட்டது. வகுப்பறையில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்காரச் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தத் தொடங்கினர். சில தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் வரை மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தியிருந்தது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் திரளாக மாணவர்கள் சென்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர், திருநள்ளாறு, தலத்தெரு ஆகிய பகுதிகளில் பல்வேறு பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சென்று மாணவர்கள் வருகையை பார்வையிட்டார். மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். பள்ளிக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கூறுகையில், கரோனா பொது முடக்கத்துக்குப் பின் பள்ளிகளுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ரூ.1 கட்டணத்துடன் இயக்கப்படும் மாணவர் பேருந்தை அரசு இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com