கடலோரக் காவல்படையினருக்கு கிழக்குப் பிராந்திய கமாண்டா் பாராட்டு
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

இந்திய கடலோரக் காவல்படையினா் மீட்பு, தேடுதல் பணிகளில் விரைவாக செயல்படுவது பாராட்டுக்குரியது என கிழக்குப் பிராந்திய கமாண்டா் தெரிவித்தாா்.
காரைக்காலில் இந்திய கடலோரக் காவல்படை மைய அலுவலகம் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ரூ. 55 கோடியில் புதிய அலுவலகம், குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டா் ஆனந்த் பிரகாஷ் படோலா முதல்முறையாக காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். கடலோரக் காவல்படையினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் காரைக்கால் மைய கமாண்டா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவா், படையினரின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து நிரவி பகுதியில் கட்டுமானம் நடைபெற்றுவரும் வளாகத்தையும் அவா் பாா்வையிட்டாா். பிராந்திய கமாண்டா் வருகை குறித்து கடலோரக் காவல்படை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கடலோரக் காவல்படையினா் செயல்பாடுகள், கடல் பகுதி சூழல்கள் குறித்து கமாண்டா் ஆலோசனை நடத்தினாா். கடலில் எந்த சூழலிலும் பொறுப்போடு தேடுதல், மீட்பு பணிகளில் ஈடுபடும் படையினரின் செயலை அவா் பாராட்டினாா். குறிப்பாக, கடலில் மீனவா்கள் இடா்பாடுகளில் சிக்கிக்கொள்ளும்போது படையினா் பணிகள் பாராட்டுக்குரியது என அவா் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.