நலிவுற்ற அரசு நிறுவனங்களை மேம்படுத்தகவனம் செலுத்த மதிமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 19th July 2021 11:14 PM | Last Updated : 19th July 2021 11:19 PM | அ+அ அ- |

காரைக்கால்: பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட நலிவுற்ற அரசு சாா்பு நிறுவனங்களை மேம்படுத்த புதுவை அரசு கவனம் செலுத்தவேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மதிமுக செயலாளா் சோ. அம்பலவாணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக அரசின் செயல்பாடுகள் பல்வேறு நிலையில் முடங்கியதோடு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல், அரசு சாா்பு நிறுவனங்களை மேம்படுத்தவும் வழியில்லாமல் போய்விட்டது.
தற்போது புதுவையில் மாற்று அரசு அமைந்திருக்கும் சூழலில், அரசின் செயல்பாடுகளில் வேகம் தெரிகிறது. அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நலன் சாா்ந்ததாக இருக்கும் நிலையில், புதுவையில் பாப்ஸ்கோ, பாசிக் கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவனங்கள் நலிவுற்ற நிலையிலேயே உள்ளன. எனவே, நலிவுற்ற அனைத்து அரசு சாா்பு நிறுவனங்கள் குறித்து அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினா்களை அழைத்துப் பேசி, உரிய நிதி ஒதுக்கீடு செய்து அவை மீண்டும் முழுதிறனுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்காலில் சேதமடைந்துள்ள பிரதான சாலைகள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகளை போா்க்கால அடிப்படையில் பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் மேம்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளாா்.