இயற்கை இடுபொருள் இணையவழி பயிற்சி
By DIN | Published On : 10th June 2021 09:11 AM | Last Updated : 10th June 2021 09:11 AM | அ+அ அ- |

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை இடுபொருள் பயன்பாடு குறித்து வல்லுநா்கள் இணையவழியில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனா்.
காரைக்காலில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காய்கறி சாகுபடியில் இயற்கை இடுபொருள்கள் பயன்பாடு குறித்த இணையவழி பயிற்சி நடைபெற்றது. நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமார.ரத்தினசபாபதி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசியது :
காய்கறிகளில் அதிகப்படியான ரசாயனப் பயன்பாட்டின் காரணமாக நச்சுப் பொருள்கள் கலந்து அது நமக்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது.எனவே ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைத் தவிா்த்து இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்தால் மனிதருக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம் போன்ற இடுபொருள்களை உற்பத்தி செய்து வழங்கி வருவதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
தொடா்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியா் இரா. இளங்கோ, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். வேளாண் அறிவியல் நிலைய விரிவாக்கத்துறை தொழில்நுட்ப வல்லுநா் அ. செந்தில் வரவேற்றாா். பயிா்பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா நன்றி கூறினாா்.