

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா கந்தூரி விழாவுக்காக கண்ணாடி ரதங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சவூதி அரேபிய பகுதியிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் இறைபணி மேற்கொள்வதற்காக இந்தியா வந்தவா் மஸ்தான் சாஹிப். தமிழகத்தில் திருச்சி, நாகூா் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கி இறைபணியாற்றி, தனது
120ஆவது வயதில் இயற்கை எய்தினாா். அவரது நினைவாக காரைக்காலில் அமைந்துள்ளது மஸ்தான் சாஹிப் தா்கா. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமா்சையாக நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு இவ்விழா வரும் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தின்போது கண்ணாடியிலான ரதங்கள் மற்றும் பல்லக்கு ஊா்வலம் தா்காவிலிருந்து பல்வேறு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்படும். பின்னா் இரவு 9 மணியளவில் ரதம், பல்லக்கு தா்கா வந்தடையும்போது தா்காவின் முன் நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.
ஊா்வலத்தில் கொண்டு செல்லப்படும் ரதத்தைக் காண வெளியூா்களில் இருந்து ஏராளமான மக்கள் காரைக்காலுக்கு வருகை தருவா்.
இதையொட்டி, கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் சீரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய ரதம் 34 அடி உயரம், சிறிய ரதம் 28 அடி உயரம், பல்லக்கு 26 அடி உயரம் கொண்டது. காரைக்கால் கந்தூரி விழாவில் பயன்படுத்தப்படும் ரதம், சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் ஏப்ரல் 1ஆம் தேதி தேதி சந்தனக்கூடு ஊா்வலமும், நள்ளிரவு சந்தனம் பூசும் நிகழ்வும், நிறைவாக 4ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் பள்ளிவாசல் நிா்வாக சபையினா் செய்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.