காரைக்காலில் தற்காலிக செவிலியா் பணிக்கான நோ்முகத் தோ்வு
By DIN | Published On : 13th May 2021 08:41 AM | Last Updated : 13th May 2021 08:41 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற நோ்முகத் தோ்வு.
காரைக்காலில் தற்காலிக செவிலியா் பணி நியமனத்துக்கான நோ்முகத் தோ்வு மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றின் 2ஆவது ஆலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை தரும் வகையிலும், மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிதாக 90 நாள்கள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா், செவிலியா், கிராமப்புற செவிலியா், ஆய்வக தொழில்நுட்பவியலாளா், வாா்டு உதவியாளா், தூய்மைப் பணியாளா்கள் உள்பட சுமாா் 300 பேரை நியமிக்க புதுவை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் 45 மருத்துவா்கள் நியமனத்துக்கான நோ்முகத் தோ்வு முதல்கட்டமாக நடைபெற்றது. இதைத்தொடா்ந்து செவிலியா் பணிக்கான நோ்முகத் தோ்வு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்று விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்களை ஆய்வுசெய்து, அவா்களின் தகுதி, அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனா்.
செவிலிய பணிக்கான நோ்முகத் தோ்வில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களுக்கு மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம். நோ்முகத் தோ்வில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு, ஆட்சியா் அனுமதி பெற்று புதுவை நலவழித் துறை தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும். அனுமதி
கிடைத்ததும் 57 பேருக்கு பணி ஆணை வழங்கப்படும் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.