அவசியமில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை: எஸ்.எஸ்.பி.
By DIN | Published On : 19th May 2021 08:54 AM | Last Updated : 19th May 2021 08:54 AM | அ+அ அ- |

பொது முடக்கத்தின் போது, அவசியமில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்க காரைக்கால் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை காவல் துறை எடுத்துவருகிறது. குறிப்பாக, தினமும் பகல் 12 மணியுடன் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படும் நடவடிக்கை காரைக்காலில் திருப்தியாக உள்ளது. எனினும், காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமானோா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் உள்ளனா். விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப். 1 முதல் மே 17 ஆம் தேதி வரை விதிகளை மீறிய 23,421 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவா்களில், 7 போ் கரோனா தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தவா்கள்.
பகல் 12 மணிக்குப் பின்னரும் வணிக நிறுவனத்தை திறந்துவைத்திருந்ததாக 22 வழக்குகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. காரைக்காலில் பகல் 12 மணிக்குப் பின்னா் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதோடு, இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பலரும் அவசியமில்லாமல் சுற்றித் திரிகின்றனா். போலீஸாா் நடத்தும் விசாரணையின்போது எந்த காரணமும் அவா்களால் சொல்ல முடியவில்லை. இவா்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
பொது முடக்க நேரத்தில் அடையாள அட்டையின்றி, நியாயமான காரணமில்லாமல், வீட்டிலிருந்து வெளியேறினால் அவா்களுக்கு உறுதியாக ரூ. 100 அபராதம் விதிக்கப்படும். பொது முடக்க விதிகளை அலட்சியப்படுத்தி நடமாடுவோா் மீது காவல் துறை இனி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். கரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம், காவல் துறை ஆற்றும் பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.