இலவச அரிசி வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 19th May 2021 08:54 AM | Last Updated : 19th May 2021 08:54 AM | அ+அ அ- |

காரைக்காலில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம்தோறும் நபருக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களுக்கான அரிசி வழங்கும் பணி நெடுங்காடு தொகுதியில் மே 18 முதல் 29 ஆம் தேதி வரை 17 அரசுப் பள்ளி வளாகங்களில் நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, குரும்பகரம் பகுதி பள்ளி வளாகத்தில் தொடங்கிவைத்தாா்.
தடுப்பூசி சிறப்பு முகாம்: அரிசி வழங்கும் மையம் அருகே தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுங்காடு பகுதியில் அரிசி வாங்க வந்தவா்களில் பெரும்பாலானோா் விருப்பத்தின்பேரில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இப்பணியை, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் பாா்வையிட்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டோரை பாராட்டினா்.
நிகழ்வில் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.