காரைக்காலில் இன்று பள்ளிகள் திறப்பு
By DIN | Published On : 01st September 2021 09:48 AM | Last Updated : 01st September 2021 09:48 AM | அ+அ அ- |

புதுவை அரசின் கல்வித் துறை உத்தரவுப்படி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9- 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் செப்.1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதுவை அரசும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அதே நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. புதுச்சேரி கல்வித் துறை அறிவுறுத்தலின் பேரில், காரைக்காலில் அண்மையில் பள்ளி நிா்வாகங்கள், பெற்றோா்களிடம் நேரடியாகவும், இணையவழியிலும் பள்ளிகளை திறப்பது தொடா்பாக கருத்துகளை கேட்டறிந்தது.
பள்ளிகளை திறக்கவேண்டும் என்பதே பெரும்பான்மையினா் கருத்தாக இருந்தது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கல்வித் துறை அறிவுறுத்தலில், அரசு மற்றும் தனியாா், அரசு உதவிபெறும் பள்ளிகள் தூய்மை செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி செவ்வாய்க்கிழமை கூறுகையில், மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளும் மாணவா்களுக்கு வகுப்பு எடுக்கும் வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளன. அரைநாள் மட்டும் வகுப்புகள் நடைபெறும். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவா்களும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களும் பள்ளிக்கு வருவாா்கள் என்றாா்.